• June 10, 2023
  • peacockhospital00
  • 0

விளையாட்டில் காயம் ஏற்படுவது சாதாரணமான ஒன்று தான், ஆனால் முறையான முதலுதவியும் சிகிச்சையும் இல்லாவிட்டால் அதனால் நீடித்த வலியும் ஆபத்தும் ஏற்படலாம். எனவே விளையாடுகையில் ஏற்படும் காயங்களை அலட்சியமாகப் புறக்கணிப்பது நல்லது அல்ல

பெரும்பாலும் இம்மாதிரியாக விளையாடும் பொழுது ஏற்படும் காயங்கள் ஒருவரின் எலும்புகளைப் பாதிக்கும் வாய்ப்பு அதிகம் உண்டு. ஒருவரின் எலும்புகளை இரண்டு வகையில் பிரிக்கலாம். ஒன்று மேல் முட்டு  (Upper Limb) மற்றொன்று கீழ் முட்டு (Lower Limb).  இதில் விளையாட்டுகளின் பொழுது கீழ் முட்டு அதிகம் காயம் படும் சாத்தியம் உண்டு. அதிலும் மிகவும் காயம் கொள்ள வாய்ப்புள்ளது முழங்கால் முட்டு (knee Joint). இது கால்பந்து கபடி போன்ற அதிக தீவிரத்தோடு விளையாடும் விளையாட்டுகளால் நேரக் கூடும். இம்மாதிரியான விளையாட்டின்போதோ அல்லது சாதாரணமான ஒரு வேகமான ஓட்டம் அல்லது படிகளில் இறங்கி ஏறுவது போன்ற செயல்களில் ஈடுபடும் போது கால் தசைகள் சுளுக்கிக் கொள்வதற்கான வாய்ப்புகள் அதிகம். இப்படிச் சுளுக்கும் பொழுது கால்களில் வேதனையும் கால்கள் உறுதியேற்றும் தென்படும். முழங்காலுள் இருக்கும் முக்கியமான இரண்டு வகையான தசை நார்கள் (ligament): முன்புற சிலுவை தசைநார் (Anterior cruciate ligament), பின்புற சிலுவை தசைநார் (Posterior cruciate ligament) . இவை தான் மிக விரைவில் காயமடையக் கூடியவை. இதில் காயம் ஏற்பட்டால் முதலில் முழங்கால்களில் வீக்கம் ஏற்படும் பின் நடப்பதில் சிரமம் வரும். இதனைச் சரியாகக் கவனிக்காமல் விட்டுவிட்டால் இதனால் நாளடைவில் நடப்பதில் ஒரு வகையான உறுதியற்ற நிலை வரும். இதனை முதலில் ஒரு எலும்பியல் நிபுணரிடம் காட்டி என்ன நிலை எனக் கண்டறிந்து, வேண்டுமானால் எம்.ஆர்.ஐ (MRI) போன்ற ஸ்கேன் செய்து என்ன பிரச்சனை என அறிந்து அதற்கான தீர்வை காண வேண்டும். அடுத்தபடியாக மூட்டுப்பகுதி தசை குருத்தெலும்பு (Meniscus). காயப்படுவதற்கான சாத்தியக் கூறுகளும் உண்டு. இந்த தசை குருத்தெலும்பு என்பது எலும்புகளுக்கு இடையில் ஒரு மெத்தை போல் அதனைப் பாதுகாத்துக் கொண்டு இருக்கும். இது ஒரு மென்மையான பகுதி. ஓடியாடி விளையாடுகையில் இத்தசை எலும்புகளுக்கு இடையில் மாட்டிக் கொண்டு கிழிவதற்கோ அல்லது காயமடைவதற்கோ வாய்ப்புண்டு. இது அல்லாது வேறு சிறு காயங்களும் இப்பகுதியில் வருவதற்கான வாய்ப்புண்டு. அவை கணுக்கால் சுளுக்கு போன்றவை. இது விளையாடுவதால் மட்டும் அல்ல சாதாரணமாக நடப்பதாலும் கூட நிகழும். இந்த சுளுக்கு தசையினுள் நடக்கும் சுளுக்காகவும் இருக்கலாம், வெளியில் நடக்கும் சுளுக்காகவும் இருக்கலாம். இதனை ஊடுகதிர் (Xray) எடுத்துக் கண்டறிந்து சிகிச்சை அளிக்கலாம். முழங்கால் முட்டுப் பகுதியில் கண்டறியப்படும் காயங்கள் பொதுவாக, முன்புற சிலுவை தசைநார், பின்புற சிலுவை தசைநார்,  மூட்டுப்பகுதி தசை குருத்தெலும்பு போன்ற பகுதிகளில் தென்பட்டால் எம்.ஆர்.ஐ செய்து அதனை உடனடியாக சீர் செய்ய வேண்டும். காயம் வலுவாக இருந்த காயப்பட்டவர் அதனைச் சீர் செய்து விளையாட்டு போன்றவற்றைத் தொடர வேண்டும் என முற்படும் வேலையில், சில சமயங்களில், தசை நார்களின் சீர் திருத்தம் அறுவை சிகிச்சை மூலமாகவும் செய்யப்படலாம்.பெரும்பாலும் திறந்த அறிவை சிகிச்சை (Open Surgery) அல்லாது மூட்டுஅகநோக்கி (Arthroscopic) மூலமாகவே அறுவை சிகிச்சை செய்யப் படுகிறது. மூட்டுஅகநோக்கி அறுவை சிகிச்சையில் ஒரு புகைப்படக் கருவி (Camera) பயன்படுத்தப்பட்டு முடிந்த அளவிற்கான சிறிய துவாரமே போடப்படுகிறது. இது மிகவும் பொதுவான ஒரு சிகிச்சையும் கூட. இந்த பகுதியில் ஏற்படும் காயங்கள் உடனடியாக சிகிச்சைக்கு உட்பட்டவை அல்ல, காயமாகி சிறிது காலம் ஆன பின்னும் சிகிச்சை நிவாரணம் அளிக்கும். இருப்பினும் அதிக தாமதம் பரிந்துரைக்கப் படமாட்டாது.

உடலின் மேல் முட்டுப் பகுதியில் பெரும்பாலும் காயம் ஏற்படுவதற்கு வாய்ப்பு குறைவு. அப்பகுதியில் தோள்பட்டை கூட்டில் (Shoulder Joint) தான் அடிக்கடி காயம் ஏற்படும். இது பெரும்பாலும் கனமான பொருட்களைத் தூக்கும் யாவருக்கும் வரும் தசை கோளாறு தான். அதிக கனமான எடை கொண்டவற்றைக் கொண்டு உடற்பயிற்சி செய்பவர்கள் இதனால் பாதிக்கப்படலாம். அதில் சுழற்றிக்கச்சை (Rotatory cuff) பகுதியில் தான் பாதிப்புகள் அதிகம் ஏற்படும். இது தோள்பட்டையின் எலும்புகளின் மென்மையான இயக்கத்திற்கு உதவுவது. இந்த தசையில் சுளுக்கு ஏற்படுவது சுலபம். தோள்பட்டையின் கேப்பசுலார் (capsular) பகுதியிலும் காயம் ஏற்படலாம். இவ்வாறு காயம் ஏற்பட்டால் அப்பகுதியில் வீக்கம் வரும். தோள்பட்டையின் பக்கவாட்டு (lateral) பகுதியிலும் காயம் ஏற்பட வாய்ப்புகள் உண்டு.தோள்பட்டை  பகுதியில் காயம் ஏற்பட்டால் அதீத கவனம் வேண்டும், ஏன் என்றால் அதைக் கவனிக்காமல் அது தோள்பட்டை இடப்பெயர்வாக (Shoulder Dislocation) மாறலாம்.

இவ்வாரான காயங்களுக்கு முதலில் தேவையானது ஓய்வு. எந்த பகுதியில் காயம் ஏற்பட்டு உள்ளதோ அந்த பாகத்தை அதிகம் உபயோகிக்காமல் இருக்கையில் அந்த பகுதியிலுள்ள திசுக்கள் தன்னை தானே சரி செய்து கொள்ள முற்படும். எனினும் கூடிய விரைவில் மருத்துவரிடம் செல்வது மிகவும் அவசியம்.அடிபட்ட இடத்தில் அல்லது வீக்கம் உள்ள இடத்தில் பனிக்கட்டியைக் (ice cube) கொண்டு தடவி விடுதல் வேண்டும். தோள்பட்டையில் காயம் ஏற்பட்டிருந்தால் அதிக எடை உள்ள பொருட்களைத் தூக்குவதைத் தவிர்க்கவும். முழங்கலில் வலி ஏற்பட்டால், வேகமாக நடப்பது, ஓடுவது போன்ற செயல்களைத் தடுக்கவும். இந்த வேலைகள் அந்த தசைகளை ஆற விடாமல் செய்யும். புரதச்சத்து அதிகம் கொண்ட உணவுகளை உன்ன வேண்டும். சீரான உடற்பயிற்சி செய்வதும் வலிக்கு நிவாரணம் அளிக்கும். எனினும் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவதின் மூலமாகவே வேறு இன்னல்கள் வராமல் எளிதில் குணமடையலாம்.