• October 3, 2023
  • peacockhospital00
  • 0

இன்றைய மருத்துவ உலகில் பல வியாதிகள் மனிதர்களின் மனதில் அச்சத்தை உருவாக்குகின்றன. பித்தப்பை கற்களும் அவற்றில் ஒன்று.

திருத்தணியில் உள்ள பீகாக் மருத்துவமனை நிர்வாக இயக்குனர் மற்றும் சிறுநீரக மருத்துவர் டாக்டர் ஶ்ரீகிரன் பித்தப்பை கற்களால் பாதிக்கப்பட்டு, மனதில் அச்சத்துடன் தன்னிடம் வரும் மக்களுக்கு சிறந்த வழிகாட்டியாக இருக்கிறார். அவர்கள் மனதிலுள்ள பயத்தையும், சந்தேகங்களையும் நீக்கி அவர்கள் விரைவில் குணமடைய வழிகாட்டுகிறார்.

அவரிடம் வந்த நோயாளிகளில் ஒருவர் தான் சுதா. சுதா 38 வயதான சுறுசுறுப்பான பெண். சிறு வயதிலிருந்து அவர் ஆரோக்கியமாகவும், சந்தோஷமாகவும் இருந்தார். அவர் அசைவ உணவுகளையும், எண்ணெயில் பொரித்த உணவுகளையும் அடிக்கடி உண்ணும் பழக்கம் உடையவர். திடீரென அவருக்கு வயிற்று வலி வர ஆரம்பித்தது. சில நேரங்களில் வயிற்று வலியுடன் வாந்தியும் இருக்கும்.

வலியை தாங்க முடியாத நிலையில் அவர் மருத்துவமனைக்குச் சென்றார். அவருக்கு பித்தப்பபையில் கல் இருப்பது உறுதி செய்யப்பட்டது. சுதாவின் மனதில் மிகுந்த அச்சம் ஏற்பட்டது. தனக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை வருமோ என கவலை கொண்டார். சுதா மெல்ல மெல்ல தன் உற்சாகமான சுபாவத்தை இழக்க ஆரம்பித்தார்.

பீகாக் மருத்துவமனைக்கு வந்து டாக்டர் ஶ்ரீகிரனை சந்தித்த சுதாவிற்கு, டாக்டர் பித்தப்பை கற்களை பற்றி விளக்கி கூறினார். அவரிடம் பின் வருமாறு பேசி அவருக்கு தைரியம் அளித்தார்.

பித்தப்பை என்பது எல்லோருக்கும் இருக்கும் ஒரு சிறிய பை. இது கல்லீரலுக்கு கீழே இருக்கும். இந்த பித்தப்பை நம் உடலில் என்ன வேலை செய்கிறது என்பதை நாம் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும். கல்லீரலில் உற்பத்தி ஆகும் பித்த நீரை பித்தப்பை சேமித்து வைக்கும். நாம் உணவு உண்ட பின் பித்தப்பை சுருங்கும். அதில் உள்ள பித்த நீர் வெளியே வந்து சிறுகுடலுக்கு சென்று உணவு செரிமானம் ஆக உதவும்.

யாருக்கெல்லாம் பித்தப்பையில் கல் உருவாகும் அல்லது உருவாகாது என்று எவராலும் கூற முடியாது. பித்தப்பை கற்கள் யாரை வேண்டுமானாலும் பாதிக்கலாம். அதற்கான காரணத்தை யாராலும் கண்டுபிடிக்க முடியாது.

உணவு பழக்கங்கள் பித்தப்பை கல் உருவாக ஒரு காரணமாக இருக்கலாம். அதிக கொலஸ்ட்ரால் உள்ள உணவு, எண்ணெய் அதிகம் உள்ள உணவு, பதப்படுத்தப்பட்ட உணவு இவற்றை உண்பவர்கள் மற்றும் மது அதிக அளவு அருந்துபவர்கள் போன்றவர்களுக்கு பித்தப்பை கற்கள் உருவாகும் வாய்ப்பு கூடுதலாக இருக்கும்.

மேலும் டாக்டர் ஶ்ரீகிரன் பித்தப்பை கற்களுக்கு எவ்வாறு சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் கூறினார்.

என்னிடம் நீங்கள் வந்து, டாக்டர் நான் வேறு காரணத்திற்காக அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் செய்தேன். என் பித்தப்பையில் கல் இருப்பதாக தெரிய வந்துள்ளது என்று கூறி பதட்டப்பட வேண்டாம். பித்தப்பையில் கற்கள் உள்ள அனைவருக்கும் பித்தப்பையை நீக்க வேண்டிய கட்டாயம் இல்லை. ஏனெனில், கற்களின் அளவு சிறியதாக இருக்கும் அல்லது அது நாம் வேறு எதற்காகவோ ஸ்கேன் செய்ய சென்ற போது கல் இருப்பது தற்செயலாக தெரிய வந்திருக்கும். இதற்காக நீங்கள் பித்தப்பையை அகற்ற வேண்டி இருக்குமோ என்று பயம் கொள்ள தேவையில்லை.

பித்தபையை நீக்க வேண்டிய அறிகுறிகள் எவை என்றால்
1. கல் அளவு 1 சென்டீமீட்டர் மேல் இருத்தல்
2. பித்தப்பையின் தடிமன் 3 மில்லிமீட்டருக்கு மேல் இருத்தல்
3. மேல் வயிற்றில் மிக அதிகமாக
வலி ஏற்படுதல்
4. உணவு உண்டபின் வயிற்றுவலி அதிகமாதல்
5. அதிக வாந்தி ஏற்படுதல்
6. அடிக்கடி பித்தப்பை தொற்று நோய் ஏற்படுதல்

மேற்கூறிய அறிகுறிகள் இருந்தால் கண்டிப்பாக பித்தப்பையை நீக்க வேண்டும்.

சில நேரங்களில் பித்தப்பை கற்கள் பித்தப்பையில் இருந்து சிறு குடல் வரும் நாளத்தில் வந்து மாட்டிக் கொள்ளும். இது மஞ்சள் காமாலை நோயை ஏற்படுத்தும். இது போல் ஒரு முறை ஏற்பட்டிருந்தால் கூட பித்தப்பையை அப்படியே விட்டுவிடக் கூடாது. அதை அறுவை சிகிச்சை மூலம் அகற்ற வேண்டும். அந்த கல் அடைப்பு ஏற்படுத்திய இடத்தை ERCP வழி முறையில் பார்த்து கல்லையும் அகற்ற வேண்டும்.

மேலும் சில நேரங்களில் பித்தப்பை கற்கள் கணையத்தில் போய் அடைத்து கணைய அழற்சி ஏற்படும். அப்போது பித்தப்பை நாளத்தில் உள்ள கல்லை அகற்றி பின் பொதுவான பித்தநாளத்தில் உள்ள கல்லையும் நீக்கி விடவேண்டும். அந்த இடத்தில் ஒரு ஸ்டென்டை போட்டுவிட்டு பித்தப்பையையும் நீக்க வேண்டியதாக இருக்கும்.

பித்தப்பையில் கல் இருக்கிறது என்று தெரிந்ததும் அதை மருந்துகளால் குணப்படுத்த முடியுமா என்று யோசிக்க வேண்டாம். பல இடங்களில் கல்லை நாங்கள் முழுமையாக கரைத்து விடுவோம் என்று கூறி நிறைய மருந்துகள் கொடுப்பார்கள். ஆனால் அது கல்லைக் கரைக்காது.

இயற்கையாகவே சிறிய கற்கள் நமக்கு தெரியாமலேயே நம் உடலை விட்டு வெளியே வந்து விடும். பெரிய கற்கள் வராது. அது அங்கேயே தான் இருக்கும்.

கற்கள் இருக்கிறது என்ற காரணத்தால் நீங்கள் பித்தப்பையை அகற்ற வேண்டிய அவசியம் இல்லை. ஜூரம், வாந்தி, வயிற்று வலி, மேல் வயிற்று வலி, கணைய அழற்சி அல்லது மஞ்சள் காமாலை போன்ற பிரச்சினை இருந்தால் மட்டும் பித்தப்பையை அகற்ற வேண்டிய சூழ்நிலை உருவாகும். யாராவது கல்லைக் கரைக்க மருந்து கொடுத்தால் அதை உண்ண வேண்டாம். ஏனெனில், பித்தப்பைக் கல்லை அப்படி கரைக்கவே முடியாது.

பீகாக் மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் மற்றும் சிறுநீரக மருத்துவர் டாக்டர் ஶ்ரீகிரனின் உதவியுடன் சுதா பித்தப்பை கற்களுக்கு சிகிச்சை பெற்று இன்று வயிற்று வலி இல்லாத சந்தோஷமான வாழ்க்கையை வாழ்கிறார்.