பிறப்பு இதய நோய்கள் (Congenital Heart Diseases) என்பது இதயம் அல்லது அதன் இரத்த நாளங்களின் வளர்ச்சி சம்பந்தப்பட்ட கட்டமைப்பின் குறைபாடு ஆகும். சில வகையான பிறவி இதய நோய் லேசானதாக இருக்கலாம். ஆனால் சில சிக்கலான குறைபாடுகள் உயிருக்கு ஆபத்தான நிலையை ஏற்படுத்தும். இருப்பினும், நோயறிதல் மற்றும் சிகிச்சை முறைகளின் முன்னேற்றங்கள் பிறவி இதய நோயால் பாதிக்கப்பட்டவர்கள் உயிர் வாழ்வை மேம்படுத்துகின்றன.
பொதுவான பிறப்பு இதய நோய்கள் யாவை?
பிறப்பு இதய நோய்களில் பல வகைகள் இருந்தாலும் நம் ஊர்களில் பரவலாகத் தென்படும் நிலைகள் என் பின்வருபவற்றை மருத்துவர் சர்ஜூன் பாஷா, இதயநோய் நிபுணர், பீகாக் மருத்துவமனை, திருத்தணி, குறிப்பிடுகிறார்:
ஏட்ரியல் செப்டல் குறைபாடு (Atrial Septal Defect) (ASD), இது இதயத்தின் 2 சேகரிக்கும் அறைகளுக்கு (Collecting Chambers) (இடது மற்றும் வலது ஏட்ரியா (Atria)) இடையே ஒரு துளை ஏற்படுவதாகும். ஏ.எஸ்.டி இருக்கும் போது, இதயத்தின் வலது பக்கத்திற்குள், குறைபாட்டின் மூலம், கூடுதல் இரத்தம் பாய்கிறது, இதனால் அது நீட்டிக்கப்பட்டு பெரிதாகிறது.
வென்ட்ரிகுலர் செப்டல் குறைபாடு (Ventricular Septal Defect) (VSD), இது பிறவி இதய நோயின் பொதுவான வடிவமாகும். இதயத்தின் 2 உந்தி அறைகளுக்கு (pumping chambers) (இடது மற்றும் வலது வென்ட்ரிக்கிள்கள் (Ventricles)) இடையே ஒரு துளை இருக்கும்போது நிகழ்கிறது.
கருப்பையில் குழந்தை வளரும்போது, டக்டஸ் ஆர்டெரியோசஸ்(Ductus Arteriosus) எனப்படும் இரத்த நாளமானது நுரையீரல் தமனியை (pulmonary artery) நேரடியாகப் பெருநாடியுடன் (Aorta) இணைக்கிறது. டக்டஸ் ஆர்டெரியோசஸ் இரத்தத்தை நுரையீரலிலிருந்து (இது பிறப்பதற்கு முன்பு சாதாரணமாக வேலை செய்யாது) பெருநாடிக்குத் திசை திருப்புகிறது. பேடன்ட் டக்டஸ் ஆர்டெரியோசஸ் (Patent Ductus Arteriosus) என்பது பிறப்புக்குப் பிறகு இந்த இணைப்பு மூடப்படாமல் இருப்பது. இதன் பொருள் நுரையீரலுக்குள் கூடுதல் இரத்தம் செலுத்தப்பட்டு, இதயமும் நுரையீரலும் கடினமாக உழைக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.
நுரையீரல் வால்வு ஸ்டெனோசிஸ் (Pulmonary Valve Stenosis) இது ஒரு குறைபாடு ஆகும். இதில் நுரையீரல் வால்வு, வலது இதய உந்தி அறையிலிருந்து (வலது வென்ட்ரிக்கிள்) நுரையீரலுக்கு இரத்த ஓட்டத்தைக் கட்டுப்படுத்துகிறது, இது இயல்பை விடக் குறுகலாக உள்ளது. இதனால், நுரையீரலுக்குச் செல்ல குறுகிய வால்வு வழியாக இரத்தத்தைத் தள்ளச் சரியான இதய பம்ப் கடினமாக உழைக்க நேரிடும்.
ருமாட்டிக் காய்ச்சலால் (Rheumatic Fever) இதய வால்வுகள் நிரந்தரமாகச் சேதமடையும் நிலையே ருமாட்டிக் இதய நோய் (Rheumatic heart disease). இதனை “பெரும்பாலும் நம் ஊர் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்பு இது என்றும் எனவே குழந்தைகளுக்குச் சுகாதாரமான சூழ்நிலை அமைத்துத் தருவதோடு அவர்களுக்கு வரும் சின்ன சின்ன காய்ச்சல் போன்றவற்றை உதாசினப்படுத்தக் கூடாது” என்கிறார் மருத்துவர் சர்ஜூன் பாஷா, இருதயநோய் நிபுணர், பீகாக் மருத்துவமனை, திருத்தணி.
பிறப்பு இதய நோய்களை எப்படிக் கண்டறியலாம்?
குழந்தைகள் வளரத் தொடங்கும்போது மற்றும் இளம்பருவத்தில், பிறவி இதய நோய் குறைபாடு அவர்களின் வளர்ச்சியைப் பாதிக்கலாம். சாதாரண செயல்பாடுகள் மற்றும் உடற்பயிற்சியின் போது பலவீனம், சோர்வு மற்றும் மூச்சுத் திணறலை உருவாக்கலாம். சில குழந்தைகள் மார்பு வலி, தலைச்சுற்றல் அல்லது மயக்கம் ஆகியவற்றையும் அனுபவிக்கலாம்.
பிறவி இதய நோயின் பொதுவான அறிகுறிகள் எரிச்சல், அடக்க முடியாத அழுகை, விரைவான சுவாசம், அதிக வியர்வை மற்றும் எடை அதிகரிப்பதில் சிரமங்கள் ஆகியவை ஆகும். சில குழந்தைகளுக்குத் தோலின் நிறத்தில் நீல நிறமாற்றம், மார்பில் நீர் தேங்குதல், கால் வீக்கம் மற்றும் விரைவான இதயத் துடிப்பு போன்றவையும் இருக்கலாம்.
“பெரும்பாலும் நமது மருத்துவமனையில் குழந்தைகள் பிறந்தவுடன் அவர்களுக்கு எந்தவொரு கதிர்வீச்சும் இல்லாத எக்கோ (Echo) ஸ்கேன் செய்யப்பட்டுப் பிறப்பு இதய நோய் இருக்கிறதா என்று உறுதி செய்யப்படுகிறது. அதே சமயத்தில் வளரும் குழந்தைகள் அல்லது பெரியவர்களிடம் இம்மாதரியான அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவனின் ஆலோசனை பெறுவது அவசியம். எவ்வளவு சீக்கிரமாக நோயைக் கண்டறிகிறோமோ அவ்வளவு நல்லது.” என்கிறார் மருத்துவர் சர்ஜூன் பாஷா, இருதயநோய் நிபுணர், பீகாக் மருத்துவமனை, திருத்தணி.
பிறப்பு இதய நோய்கள் எதனால் ஏற்படும்?
தாயின் கருப்பையில் உள்ள கருவின் ஆரம்பக்கால வளர்ச்சியின் போது உள்புறசூழலில் ஏற்படும் இடையூறுகளே மிகவும் பொதுவான காரணமாக அமைகிறது. தொற்றுநோய்கள், தீங்கு விளைவிக்கும் மருந்துகளால் கர்ப்பிணித் தாய்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள், கர்ப்பிணித் தாய் புகை பிடித்தல் அல்லது மது அருந்துதல், சுற்றுச்சூழல் காரணிகள் , தவறான மரபணுக்கள் (DNA) மற்றும் குரோமோசோமங்கள் (Chromosome), பிறப்பு இதய குறைபாடுகள் குடும்பத்தில் இருப்பவர்களுக்கு இருக்கும் பட்சத்தில் (குடும்ப வரலாறு),அல்லது பெற்றோர்களிடம் இருக்கும் நோய் குழந்தைக்கு ஏற்பட நேரிடும்.
மருத்துவரை எப்போது சந்திக்க வேண்டும்?
உங்களுக்கு நெஞ்சு வலி அல்லது மூச்சுத் திணறல் போன்ற கவலைக்குரிய அறிகுறிகள் இருந்தால், அவசர மருத்துவ உதவியை நாடுங்கள். உங்களிடம் பிறவி இதய நோயின் அறிகுறிகள் இருந்தால் அல்லது குழந்தைப் பருவத்தில் பிறவி இதயக் குறைபாட்டிற்குச் சிகிச்சை அளிக்கப்பட்டிருந்தால், சில கால இடைவெளியில் அவ்வப்போது மருத்துவரைச் சந்தித்தல் வேண்டும்.
“அறிகுறிகளை ஏற்படுத்தாத சிறிய குறைபாடுகள் முதல் உடனடி சிகிச்சை அளிக்கப்படவேண்டிய உயிருக்கு ஆபத்தான நிலைகள் வரை இந்த நிலையின் தீவிரம் ஒவ்வொருவருக்கும் பரவலாக மாறுபடும். பெரும்பாலும் குழந்தைப் பருவத்திலோ அல்லது குழந்தை பிறப்பதற்கு முன்போ, பிறவி இதய நோய் குறைபாடு ஏற்படலாம். புதிதாகப் பிறந்த குழந்தைகளின் பிறவி இதய நோய் குறைபாட்டின் வகை மற்றும் தீவிரத்தைப் பொறுத்து பலவிதமான அறிகுறிகளைத் தென்படலாம். எனவே நம் உடம்பு தரும் சிறு சிறு அறிகுறிகளைப் பொருட்படுத்தாமல் விடுவதை விட்டுவிட்டு, நமது உடல்நிலையில் அக்கறை கொண்டு மருத்துவரைச் சந்திக்க வேண்டும்” என்கிறார் மருத்துவர் சர்ஜூன் பாஷா, இதயநோய் நிபுணர், பீகாக் மருத்துவமனை, திருத்தணி