• June 10, 2023
  • peacockhospital00
  • 0

“ஒரு குழந்தைக்கு ஆட்டிசம் பாதிப்பு இருப்பதை 10 மாதங்கள் முதலே கண்டறியலாம். யாராவது பெயர் சொல்லிக் கூப்பிட்டால் எதிர்வினையாற்றுவது முதல் ஊர்ந்து நடப்பது வரை, முதல் 2 ஆண்டுகளில் குழந்தைகளின் வளர்ச்சி வேகமாகவே இருக்கும். குழந்தைகள் வளரும் ஆண்டுகளில் அந்தந்த காலத்திற்கு ஏற்ப வளர்ச்சியை வெளிப்படுத்துவார்கள். ஆனால் மாதங்கள் ஏற ஏற, அவர்களின் வளர்ச்சியில் உரிய முன்னேற்றம் தெரியவில்லை என்றால் உடனடியாக கவனித்து மருத்துவரிடம் அழைத்துச் செல்லுதல் அவசியம். இது போன்றவை ஆட்டிசத்தின் துவக்க அறிகுறியாகக் கூட இருக்கலாம் என்பதால் நிபுணரின் வழிகாட்டுதலைப் பெற வேண்டும். “என்கிறார் மருத்துவர் பாரதி, குழந்தை நல மருத்துவர், பீகாக் மருத்துவமனை, திருத்தணி

இந்தியாவில் பதினெட்டு லட்சத்திற்கு மேற்பட்டோர் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனாலும் இது குறித்த சரியான புள்ளிவிவரங்களோ, விழிப்புணர்வோ இல்லை. மேலை நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் இந்த விஷயத்தில் பற்றிய அறியாமை பரவலாக உள்ளது. முதலில் ஆட்டிசம் (Autism) ஒரு நோய் அல்ல குறைபாடு என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் டிஸ்ஆர்டர் (ASD -Autism spectrum disorder) என்பது ஒரு நரம்பியல் வளர்ச்சி குறைபாடு ஆகும். ஆட்டிசம் என்பது மூளை தகவல்களைப் பயன்படுத்திப் புரிந்துகொள்ளும் திறனில் குறைபாடு ஏற்படுவது. ஆட்டிசத்தால் பாதிக்கப்படும் குழந்தைகளிற்கு சமூகத்தில் சக மனிதர்களோடு தொடர்பு கொள்ளும் திறன், கலந்து பழகும் திறன் போன்றவற்றில் குறைபாடு இருக்கும். ஆட்டிசம் கொண்ட பெரும்பாலான குழந்தைகளுக்கு நன்றாகப் பேசும் திறன் இருக்காது. சில குழந்தைகள் ஓரளவு பேசினாலும் தெளிவு இல்லாமல் பேசுவார்கள். அதை மற்றவர்களால் புரிந்து கொள்வது சிரமமாக இருக்கும். முக்கியமாக ஒரே மாதிரியான விஷயங்களைத் திரும்பத் திரும்ப செய்வதில் அதிக ஆர்வம் உடையவர்களாகவும் இருப்பார்கள். ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நாம் பேசுவதைப் புரிந்து கொள்வதிலும், அவர்கள் பேசுவதிலும், எல்லாருடனும் கலந்து பழகுவதிலும் சிக்கல் இருக்கும். இந்த குறைபாட்டை முற்றிலும் சரி செய்யும் வகையில் சிகிச்சை இல்லை என்றாலும், ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை அளித்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் வாழ்க்கையை நன்றாக மேம்படுத்த முடியும்.

மீண்டும் மீண்டும் ஒரே விஷயத்தைச் செய்யும் நடத்தை, பொம்மைகளை ஒரு குறிப்பிட்ட முறையில் ஒழுங்காக வைக்க விரும்புவது மற்றும் அதை மாற்றும் போது வருத்தமடைவது, ஒரே வார்த்தைகள் அல்லது வாக்கியத்தை மீண்டும் மீண்டும் கூறிக் கொண்டே இருப்பது, ஒவ்வொரு முறையும் ஒரே மாதிரியே பொம்மைகளுடன் விளையாடுவது, அதிகம் தனிமையை விரும்புவது, காரணமேயன்றி கையில் கிடைக்கும் பொருட்களைத் தூக்கி வீசுவது, வித்தியாசமான முறையில் கைகளை வளைத்து, நெளித்துக் கொண்டே இருப்பது போன்றவை ஆட்டிசம் நிலையினால் பாதிக்கப்பட்ட குழந்தையின் சில குணாதிசயங்களில். கர்ப்பகால நீரிழிவு, இரத்தபோக்கு, குழந்தை பிறக்கும் போது தாயின் வயது அதிகமாக இருத்தல் நச்சுகள், ஊட்டச்சத்து, தொற்றுகள் அல்லது பிற சுற்றுச்சூழல் போன்ற காரணங்களால் ஆட்டிசம் ஏற்படலாம். குரோமோசோம் பதிமூன்றில் ஏற்படும் மரபணு மாற்றத்தால் குடும்ப ஆட்டிசம் ஏற்படுகிறது என்றும் ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.

ஆட்டிசம் என்பதில் அஸ்பெர்ஜர் சிண்ட்ரோம் (Asperger’s Syndrome), ரெட் சிண்ட்ரோம் (Rett Syndrome), குழந்தைப் பருவ சிதைவு கோளாறு (Childhood Disintegrative Disorder), பரவலான வளர்ச்சி சீர்குலைவு (Pervasive Development Disorder – PDD)  போன்ற பல வகைகள் உண்டு. அதில் எந்த வகையில் ஒரு குழந்தை பாதிக்கப்பட்டு இருக்கிறது என அறிந்து அதற்கேற்ற சிகிச்சை வழங்குதல் வேண்டும்.

தங்கள் குழந்தைக்கு ஆட்டிசம் பாதிப்பு உள்ளது எனக் கண்டறிந்த உடனே பீதியும், திகைப்பும், விரக்தியும் ஆட்கொள்வது இயல்புதான், ஆனால், உடனடியாக அவற்றிலிருந்து வெளியே வந்து அடுத்த செய்ய வேண்டியது என்ன என்பதை அறிந்துகொண்டு காரியத்தில் இறங்கிவிட வேண்டும்.ஆட்டிசம் கண்ட குழந்தைகளின் பெற்றோர்கள் உடனடி நடவடிக்கையில் இறங்கிவிட வேண்டும். தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்தல், பொது இடங்களில் குழந்தையால் அவமானம் என்று நினைப்பதை அறவே தவிர்க்க வேண்டும், குறிப்பாகக் குழந்தைக்கு இத்தனை வயது ஆகிவிட்டதே எனக் கவலைப்படக்கூடாது, குற்ற உணர்வு அறவே கூடாது, வித்தியாசமாக இருப்பதற்கான துணிச்சலை வரவழைத்துக்கொள்தல், குழந்தையை அப்படியே ஏற்றுக்கொள்ளுங்கள், தொடர்ந்து முயற்சி செய்து வந்தால் நிச்சயம் பலன் உண்டு.

“பெற்றோர்கள் மருத்துவர்கள் தங்களுக்கு அளிக்கும் ஆலோசனைகளையும் பயிற்சிகளையும் தெளிவாகப் பின்பற்றுவது அவசியம். பெற்றோர்களின் உலவியில் நிலையைச் சீராகப் பார்த்துக் கொண்டால் தான் குழந்தைக்கு போதுமான கவனம் அளித்துப் பார்த்துக் கொள்ள முடியும்”.

என்கிறார் டாக்டர் பாரதி, குழந்தை நல மருத்துவர், பீகாக் மருத்துவமனை, திருத்தணி

எவ்வளவு விரைவில் அடையாளம் காண்கிறோமோ அவ்வளவு நல்லது. இந்த நிலையை 100 சதவீதம் குணப்படுத்த முடியாது, ஆனால், நடத்தை சீராக்கல் பயிற்சிகள், வளர்ச்சிக்கான பயிற்சிகள், கல்வி வளர்ச்சிக்கான பயிற்சிகள், பேச்சுப் பயிற்சி ஆகிய தொடர் பயிற்சியின் மூலம் ஓரளவு சீரான நிலைக்குக் கொண்டு வரமுடியும். கூடிய விரைவில் மருத்துவரை அணுகி அவரின் ஆலோசனைகளைப் பின்பற்றினால் இயல்பான வாழ்க்கையைத் தொடர்வது எளிது.