• June 10, 2023
  • peacockhospital00
  • 0

இன்றைய காலகட்டத்தில் நூற்றில் 80 பெண்களுக்குக் காலம் தவறிய மாதவிடாய் (Irregular periods) பிரச்சனை இருக்கிறது. ஒவ்வொரு பெண்ணும் பருவமடைந்த பிறகு மாதந்தோறும் 28 நாட்கள் முதல் 35 நாட்கள் இடைவெளியில் மாதவிடாய் சுழற்சிக்கு உள்ளானால் அவர்களது கருப்பை எந்தவிதமான பிரச்சனையும் இல்லாமல் ஆரோக்கியமாக இருக்கிறது எனலாம். இதன் இடையில் ஒழுங்கற்ற மாதவிடாய், அதிக வலி உபாதை, அதிக ரத்தப்போக்கு போன்ற கடுமையான உடல் நலப் பிரச்சனைகளைக் கவனிக்க வேண்டியது அவசியம்.

இந்த மாதவிடாய் கோளாறுகள் பெண்களின் வயதிற்கேற்றவாறு மாற்றமடையும். பருவ வயது பெண்களுக்குச் சீரற்று இருப்பது, அதிக இரத்தப்போக்கு போன்ற பிரச்சனைகள் இருக்கும். சீரற்ற மாதசுழற்ச்சி என்பது உடல் எடை அதிகரிப்பு, ஸ்ட்ரெஸ், வாழ்க்கைமுறை அல்லது பழக்கவழக்க மாறுதல் காரணமாக நிகழும். இதை பாலிசிஸ்டிக் ஓவேரியன் டிசீஸ் ( Polycystic Ovarian Disease -PCOD) என மருத்துவர்கள் குறிப்பிடுகிறார்கள். பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் ( Polycystic Ovaries Syndrome – PCOS) அதாவது சினைப்பையில் நீர்க்கட்டி பிரச்சனை இருப்பவர்கள், உடலில் ஹார்மோன் சமநிலையற்று இருத்தல் போன்றவை ஒழுங்கற்ற மாதவிடாயை உண்டாக்குகின்றன.

அதிகப்படியான இரத்தப்போக்கு, குறைந்த இரத்தப்போக்கு, நீண்ட இடைவெளி மாதவிடாய் போன்ற அனைத்துமே தொடரும் போது அவை கருப்பையிலும் குழந்தைப்பேற்றிலும் சிக்கலை உண்டாக்குவதற்கு அதிகப்படியான வாய்ப்புகள் உண்டு என்கிறார்கள் மருத்துவர்கள். மாதவிடாய் காலங்களில் வலி என்பது உடம்பில் சுரக்கும் ரசாயன மற்றதால் ஏற்படுவது, அது இயல்பானது என்றாலும் எழுந்திருக்கவே முடியாத அளவுக்கு வலி இருந்தால் அது டிஸ்மெனோரியா (Dysmenorrhoea) என்றழைக்கப்படுகிறது. இந்த நிலை இருந்தால் பெண்களின் அடிவயிற்றில் கனமான உணர்வு இருக்கும். இடுப்புப்பகுதி இழுப்பது போன்ற உணர்வைப் பெறுவார்கள்.

பெரும்பாலும் பெண்களிடம் அதிகப்படியான இரத்த்ப்போக்கு இருப்பது, அடினொமயாசிஸ் (Adenomyosis) எனப்படும் ஒரு நிலையாக இருக்கலாம். இதில் கருப்பையின் உள் திசுவான, எண்டோமெட்ரியம் என்று அழைக்கப்படும் கருப்பையின் தசை சுவரில் இது வளரத் தொடங்குகிறது. இது அல்லாது கர்ப்பவாய்யிலும் சில பிரச்சனைகள் ஏற்படக்கூடும். சில பெண்களுக்குத் தனது துணையுடன் புணர்ந்த்ப்பின் இரத்த்ப்போக்கு ஏற்படும். இதுபோன்ற அறிகுறிகளுக்கு கவனமளிப்பது அவசியம். கருப்பையில் ஏற்படும் மற்றொரு நிலை தான் கருப்பைநார்திசுக்கட்டிகள் (Fibroid) இந்து கட்டிகளைக் கண்டு பயப்படத் தேவையில்லை, மருத்துவ வளர்ச்சியினால் இந்த கட்டிகளை அறுவை சிகிச்சையன்றி லேசர் சிகிச்சை மூலம் சீர் செய்யும் நிலை தான் இன்றுள்ளது.

தைராய்டு பிரச்சனை இருப்பவர்களுக்கு ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சனை உண்டாகும். தைராய்டு சுரப்பிகள் சரிவரச் செயல்படாமல் இருக்கும் போது மாதவிடாய் பிரச்சனையில் மாற்றங்களும் உடல் எடையையும் அதிகரித்துவிடும். ஹைப்பர் தைராய்டை விட ஹைப்போதைராய்டு பிரச்சனை இருந்தால் இந்த பாதிப்பு வேறு பல பிரச்சனைகளையும் உண்டாக்கிவிடும். தைராய்டால் உடல் பருமன் ஒருபுறம் அதிகரிக்கும் போது உணவுப் பழக்கங்களிலும் ஜங்க் ஃபுட் (Junk Food) உணவு வகைகளைப் பின்பற்றும் போது ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சனை அதிகரிக்கவே செய்யும். இவைதவிர ஹார்மோன் சுரப்பு ஏற்றம் இறக்கமாக இருப்பதும் கூட ஒழுங்கற்ற மாதவிலக்கு பிரச்சனையை உண்டாக்கும்.

மாதவிடாய் நிருத்தத்திற்குப் பின்பு (Menopause) வரும் எந்த வித பிரச்சனையையும் எளிதாக எடுத்துக் கொள்வது பெரும் ஆபத்தை விளைவிக்கலாம்.  மாதவிடாய் நிருத்தத்திற்குப் பின்பு ஒரு துளியேனும் இரத்தப்போக்கு தென்பட்டாலும் உடனடியாக மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை பெறுவது அவசியம். அதோடு அல்லாது மாதத்தில் ஒரு முறைக்கு மேல் உதிரப்போக்கு இருப்பதும் ஆபத்தே. எனவே அப்படி ஏற்பட்டாள் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். ஒருவரின் நிலையையறிந்து ஸ்கேன் மற்றும் இரத்தப் பரிசோதனை செய்து, என்ன பிரச்சனை என்பதை அறிந்து அதற்கேற்ற தீர்வு காண்பதே உசிதம்.

அதிகப்படியாகப் பெண்கள் சந்தித்துவரும் இதை ஆரம்பத்திலேயே சரியாகக் கவனித்து சிகிச்சை அளிக்காவிட்டால் இவை கருப்பையில் பலவிதமான பிரச்சனைகளை உண்டாக்கிவிடும். மாதவிடாயின் பொழுது அளவுக்கு அதிகமான வலி, அதிக இரத்தப்போக்கு, மிகவும் குறைந்த இரத்தப்போக்கு, மாதவிடாய் நீடித்து இருப்பது என அனைத்து நிலையில்  மொத்தத்தில் மாதவிடாய் என்பது 3-4 நாட்களுக்கு, 25-35 நாட்களுக்குள் நடக்காது மாறினால் மருத்துவரை உடனடியாக அணுக வேண்டும்.

“ஒழுங்கற்ற மாதவிடாய் அறிகுறிகள் அனைத்தும் ஒருவரின் ஆரோக்கிய குறைபாட்டை உணர்த்தும் அறிகுறிகள் தான். மாதவிடாய் வராமல் இருப்பது கூட நல்லதுதான் என்று ஒழுங்கற்ற மாதவிடாயை அலட்சியம் செய்யும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. ஆனால் இந்த அலட்சியம் ஆபத்தில் முடியும் என்பதைப் பெண்கள் உணர வேண்டும். தனது மாதவிடாயில் ஏற்படும் சிறு மாற்றங்களைக் கூட அலட்சியப்படுத்தக் கூடாது. எந்த பிரச்சனையானாலும் ஆரம்பத்தில் குணப்படுத்துவது எளிது. மருத்துவரிடம் சென்றால் கருப்பப்பையை அகற்றச் சொல்வார்கள் என் அச்சப்படக் கூடாது. தாமதித்தால் அதுவே ஒரே தீர்வாக இருக்கக் கூடும். எனவே இந்த மாதவிடாய் பிரச்சனைகள் யாவும் குணப்படுத்தக்கூடியவை என அறிந்து உடனடியாக மருத்துவரின் ஆலோசனையைப் பெற வேண்டும்.” என்கிறார் மருத்துவர் அனுபமா கிரண், பீகாக் மருத்துவமனை, திருத்தணி.